கல்குவாரியில் வைத்த வெடியின் அதிர்வால் வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து கர்ப்பிணி காயம்
திண்டிவனம் அருகே கல்குவாரியில் வைத்த வெடியின் அதிர்வால் வீட்டின் சிலாப் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி காயமடைந்தார்.
பிரம்மதேசம்,
மாற்றுத்திறனாளி
திண்டிவனம் அருகே உள்ள தென்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி ஜனனி (வயது 24). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் வெளியே பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து விட்டு, வீட்டுக்குள் செல்ல முயன்றார்.
அந்த சமயத்தில் அங்குள்ள கல்குவாரியில் பாறைகளை தகர்ப்பதற்காக வெடி வைக்கப்பட்டது. அப்போது அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக, ஜீவரத்தினம் வீட்டின் பக்கவாட்டு மேற்கூரை சிலாப் இடிந்து ஜனனி மீது விழுந்தது.
இதில் காயமடைந்து வலியால் அலறிய ஜனனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வீடுகளில் வசிக்க அச்சம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணதாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் டிப்பர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதுடன், தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. மேலும் குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் நில அதிர்வு ஏற்படுவதுடன் வீடுகளும் சேதமடைகிறது. இதனால் வீடுகளில் வசிக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது என்றனர்.
பரபரப்பு
பின்னர் அவர்கள், மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்த கோரியும், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து கல்குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்து எங்கள் அச்சத்தை போக்க வேண்டும் என கூறியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள், இதுதொடா்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.