சென்னை வந்த ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பெட்டி; தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பு


சென்னை வந்த ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பெட்டி; தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பு
x

ஜனாதிபதி தேர்தல் 18-ந் தேதி நடைபெறவுள்ளதையொட்டி ஓட்டுப் பெட்டி இன்று தலைமைச் செயலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

சென்னை:

ஜனாதிபதி தேர்தல் 18-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் இந்தியா முழுவதும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. தரப்பு வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டிக் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் இரண்டு அவைகளின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அந்தந்த மாநிலங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளை இந்திய தேர்தல் கமிஷன் வழங்குகிறது. தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை செயலக வளாகத்தில் இருக்கும் குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்கான ஓட்டுப் பெட்டியை வாங்குவதற்காக டெல்லிக்கு, தமிழக துணை தலைமைத் தேர்தல் அதிகாரி வி.ஸ்ரீதர், சட்டசபை செயலக துணைச் செயலாளர் கே.ரமேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.

டெல்லிக்கு சென்றுள்ள அவர்கள் ஓட்டுப் பெட்டியை பெற்றனர். அதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் தனி இருக்கையில் வைத்து ஓட்டுப் பெட்டியை அவர்கள் கொண்டு வந்தனர். பின்னர் இரவு 7.45 மணியளவில் அதை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை செயலக வளாகத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

பின்னர் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் முன்னிலையில் அந்தப் பெட்டி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்போது குழு கூட்ட அறைக்கு அந்த ஓட்டுப் பெட்டி கொண்டு வரப்படும்.


Next Story