வரத்து அதிகரித்தும் குறையாத மீன்கள் விலை


வரத்து அதிகரித்தும் குறையாத மீன்கள் விலை
x

ஈரோடு மார்க்கெட்டில் வரத்து அதிகரித்தும் மீன்கள் விலை குறையாததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் வரத்து அதிகரித்தும் மீன்கள் விலை குறையாததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீன் மார்க்கெட்

ஈரோடு ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கடல் மீன்களும், அணை மீன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்த மார்க்கெட்டுக்கு 15 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வார இறுதி நாட்களில் மீன்களின் விற்பனை மும்முரமாக காணப்படும். இதனால் வார இறுதி நாட்களில் வரத்து அதிகமாக இருக்கும். மீன் பிடி தடைக்காலம் இருந்தபோது தமிழகத்தில் இருந்து மீன்களின் வரத்து குறைந்தது. கேரள மாநிலத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து விட்டதால் கடந்த வாரத்தில் இருந்து மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. இந்த வாரமும் சுமார் 20 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வஞ்சிரம் போன்ற ஒருசில வகை மீன்களின் விலை மட்டும் குறைந்தது.

அதாவது கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலை ரூ.900 ஆக குறைந்தது. அதேசமயம் கடல் பாறை, இறால், சீலா வாவல் போன்ற மீன்களின் விலை குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது, அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விலை விவரம்

ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அயிலை - ரூ.300, மத்தி - ரூ.250, வஞ்சிரம் - ரூ.900, பாறை - ரூ.500, முரல் - ரூ.350, இறால் - ரூ.700, சீலா - ரூ.600, கவுரி - ரூ.600, வெள்ளை வாவல் - ரூ.900, கருப்பு வாவல் - ரூ.850, மயில் மீன் - ரூ.800, கிளி மீன் - ரூ.600, மதன மீன் - ரூ.500, மஞ்சள் கிளி மீன் - ரூ.600, நகர மீன் - ரூ.450

இதேபோல் ஒரு கிலோ நண்டு ரூ.400-க்கு விற்பனையானது.


Related Tags :
Next Story