தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைய தொடங்கியது
தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைய தொடங்கியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தினாலும், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதாலும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களின் விலை அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
ஆனாலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குறைவான மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். இதனால் கடந்த 80 நாட்களாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப்பட்டது.
தற்போது காற்றின் தாக்கம் குறைந்ததால் அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டாலும் அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்வதால் மீன்களின் விலை குறைய தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் கிலோ ரூ.1,300-க்கு விற்பனையான சீலா மீன் நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிலோ ரூ.600-க்கு விற்பனையான விளமீன் ரூ.400-க்கும், ரூ.600-க்கு விற்பனையான ஊளி மீன் ரூ.450-க்கும், ரூ.450-க்கு விற்பனையான பாறை மீன் ரூ.350-க்கும், சூறை மீன் கிலோ ரூ.80-க்கும், சிறிய பாறைமீன் கூடை ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாளை மீன்கள் வரத்து இல்லாததால் ஒரு கூடை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. மீன்களின் விலை குறைய தொடங்கியதால் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர்.