விண்ணை தொடும் பூக்கள் விலை


விண்ணை தொடும் பூக்கள் விலை
x

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும், விவசாயிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

நாமக்கல்

விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து நாமக்கல் தினசரி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மலர் சந்தைக்கு வழக்கமாக வரும் சுமார் 2 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 500 கிலோ பூக்கள் மட்டுமே வருகின்றன.

பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும், விவசாயிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

ரோஜா பூக்களால் நஷ்டம்

மோகனூர் அருகே உள்ள அணியாபுரத்தை சேர்ந்த பூ விவசாயி கண்மணி என்கிற நல்லசாமி கூறியதாவது:-

நான் கடந்த 30 ஆண்டுகளாக எனது விவசாய நிலத்தில் பூ உற்பத்தி செய்து வருகிறேன். எனது விவசாய தோட்டத்தில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி போன்ற பூக்களை உற்பத்தி செய்து நாமக்கல்லில் உள்ள பூ மார்க்கெட்டில் தினசரி விற்பனை செய்து வருகிறேன்.

தற்போது எனது தோட்டத்தில் 1 ஏக்கர் விவசாய நிலத்தில் மல்லிகை செடி வைத்து உள்ளேன். பூக்களின் விலை திருவிழா, திருமணங்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காலங்களில் மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஏலம் போகும். மற்ற நேரங்களில் குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை தான் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் பூக்கடைகள் திறக்கப்படாததால், எனது விவசாய தோட்டத்தில் விளைந்த ரோஜா பூக்கள் உதிர்ந்து தோட்டத்திலே விழுந்ததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே ரோஜா செடியை முற்றிலும் அழித்து விட்டேன். தற்போது குண்டு மல்லி மட்டுமே பயிர் செய்து உள்ளேன்.

உற்பத்தி குறைவே காரணம்

நாமக்கல்லை சேர்ந்த பூ வியாபாரி கனகராஜ்:-

பனி காரணமாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கிலோ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. பெரும்பாலான பெண்கள் விலையை கேட்டுவிட்டு, சாமி பூ மட்டும் வாங்கி விட்டு சென்று விடுகிறார்கள். கடந்த நாட்களை ஒப்பிடும் போது சாமி பூக்களான சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்டவைகளின் விலையும் புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்து உள்ளது. பொதுவாக பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மல்லிகை, முல்லை போன்ற வாசனை உள்ள பூக்களின் வரத்து அதிகரிக்கும். அப்போது கிலோ ரூ.200-க்கு வாங்க ஆள் இருக்காது. பூக்கள் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவே காரணம். வியாபாரிகள் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தத்தை சேர்ந்த பூ விவசாயி மோகன்ராஜ்:-

நான் குண்டு மல்லிகை, ஊசி மல்லிகை போன்ற பூ வகைகளை பயிர் செய்து வருகிறேன். மல்லியை பொறுத்த வரையில் தற்போது செடிகளை வெட்டி விட்டு உள்ளோம். இவை வெயில் காலம் தொடங்கிய பிறகு நன்றாக பூக்க தொடங்கும். தற்போது பூக்கள் உற்பத்தி மிக குறைவாக உள்ளது. அதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் இந்த விலை உயர்வு முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. நுகர்வோருக்கு விற்பனை செய்வது அதிக விலையாக இருந்தாலும், விவசாயிகளுக்கு கிடைப்பது குறைவாகவே இருக்கிறது. பொதுவாக மழை மற்றும் பனிக்காலம் மல்லிகை பூக்களுக்கு உகந்த காலம் இல்லை.

லாபம் இல்லை

பரமத்திவேலூரை சேர்ந்த பூக்கடை உரிமையாளர் தேன்மொழி:-

பெண்கள் அதிகம் விரும்பும் பூக்களான மல்லிகை, முல்லை பூக்களுக்கு தற்போது சீசன் இல்லை. எனவே அவற்றின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் இந்த வகை பூக்கள் முழம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகின்றன. இதனை அனைத்து தரப்பு பெண்களாலும் வாங்க முடியாது. அதே சமயம் சீசன் உள்ள சாமந்தி பூ கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை கிடைப்பதால் அதை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அதை கோவிலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதேபோல் ரோஜாப்பூ நியாயமான விலையில் கிடைக்கிறது. அதை கல்லூரி மாணவிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். பூக்கள் விலை அதிகம் என்பதால் எங்களுக்கும் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைப்பதே அரிதாக உள்ளது.

அதிகஅளவு வாங்கலாம்

எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி திவ்யா செந்தில்:-

பெண்கள் விரும்பிய பூக்களை வாங்கி சூடுவதிலும், கோவிலுக்கு வாங்கி தருவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் விலைக்கு ஏற்றவாறும், சீசனுக்கு ஏற்றவாறும் பூக்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும். சாமந்தி பூ மற்றும் ரோஜாப்பூ சீசனாக இருப்பதால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மாறிக் கொள்ளலாம்.

சீசன் இல்லாத மல்லி, முல்லை பூக்களை அதிக விலை கொடுத்து கொஞ்சமாக வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இந்த வகை பூக்களுக்கு எப்போது சீசன் வருகிறதோ அப்போது குறைந்த விலையில் அதிகளவு வாங்கி பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story