பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:47 PM GMT)

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்ெமாழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கி ெசல்ல கேரளாவில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வியாபாரிகள் அதிகாலையிலேயே குவிவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும் மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.

தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.1,700 உயர்ந்து ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதுபோல் நேற்று முன்தினம் ரூ.1,100-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.650 உயர்ந்து ரூ.1,750-க்கு விற்கப்பட்டது. முல்லை பூ ரூ.700 உயர்ந்து கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது.

பனிப்பொழிவு

பூக்களின் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

கடும் பனிபொழிவு, சாரல் மழை ஆகியவற்றால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தினமும் மார்க்கெட்டுக்கு 1000 முதல் 1,500 கிலோ வரை வந்து குவியும் மல்லிகைப்பூ தற்போது 40 முதல் 50 கிலோ மட்டுமே வருகிறது.

அதே நேரத்தில் சபரிமலை சீசன், முகூர்த்த நாள் போன்றவற்றால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஒரு மாதம் வரை நீடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பிற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.220, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.600, வாடாமல்லி ரூ.50, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.15,கோழிப்பூ ரூ.40, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.150, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.350, மஞ்சள் கேந்தி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.65, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.220, கொழுந்து ரூ.180, மருக்கொழுந்து ரூ.160 என விற்பனையானது.


Next Story