தர்மபுரி நகரில் பூக்கள் விலை கடும் உயர்வு


தர்மபுரி நகரில் பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:30 AM IST (Updated: 23 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி

பூ மார்க்கெட்

தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், நல்லம்பள்ளி, அதகபாடி, செம்மனஅள்ளி, கடத்தூர், பொம்மிடி, பாப்பட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் பெரும்பாலும் பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

ஒரு சில விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பல்வேறு வகையான பூக்களை தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இங்கு தினமும் சுமார் 20 டன் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

குண்டு மல்லி, சன்ன மல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்கள் சுமார் ஒரு டன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. பெரும்பாலும் சாமந்தி பூக்கள் தான் அதிகபட்சமாக 15 டன் விற்பனைக்கு வருகிறது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு பின்னர் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்தது. இந்த நிலையில் தற்போது 2 நாட்களாக பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று பூக்களின் விலை உச்சத்தை தொட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று ரூ.800-க்கு விற்பனையானது. இதேபோன்று ரூ.300-க்கு விற்பனையான சன்னமல்லி அதிரடியாக உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் பெரும்பாலான பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை உயர்வால் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பூக்களின் விலை குறைந்து இருந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம் என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பூக்களை வாங்கி அதனை கட்டி விற்கும் சிறு வியாபாரிகளும், இந்த பூக்கள் விலை உயர்வால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பூக்களின் விலை நேற்றைய விலையை விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) மேலும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story