பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு


பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:45 PM GMT)

கடலூரில் பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.

கடலூர்

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் வந்து பூக்களை மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடலூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பண்டிகை காலம் என்பதால் வழக்கத்தை விட பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ மற்றும் குண்டு மல்லி நேற்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ரூ.150-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.350-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை ரூ.100-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கேந்தி ரூ.100-க்கும், ரூ.180-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.320-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட ரோஜா ரூ.400-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட வாடாமல்லி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. இதனால் நேற்று மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story