இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம்


இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என்று சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

ஆனைமலையில் இளநீர் விலை ரூ.23 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என்று சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

விலை வீழ்ச்சி

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பல விவசாயிகள் தேங்காய், இளநீர் பருவத்தில் வரும் போது அறுவடை செய்தனர். தற்போது கடந்த 2 மாதங்களாக இளநீர் விலையும் குறைந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் பலர் பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடு பயிர்களை தென்னை மரங்களுக்கு நடுவே பயிரிட்டு வருவாய் ஈட்டினர். இந்தநிலையில் ஆனைமலை பகுதியில் இருந்து தினமும் 5 லட்சம் இளநீர் பிற மாவட்டங்கள் மற்றும் டெல்லி, அரியானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது.

இளநீர் ரூ.23 நிர்ணயம்

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், பருவநிலை மாற்றம், தென்னை மரங்களில் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இளநீர் விளைச்சல் தற்போது குறைந்து உள்ளது. இதன் காரணமாக தினமும் 3 லட்சம் இளநீர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இளநீர் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் கூறுகையில்,

வெளிமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் இளநீர் தேவை அதிகரித்து உள்ளது. வெளிமாநிலங்களுக்கு 5 லட்சம் இளநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பொள்ளாச்சி பகுதியில் இருந்து 3 லட்சம் இளநீர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.23 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.500 அதிகரித்து, ரூ.8,000 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டாம். அறுவடை பருவத்தை சற்று தாமதப்படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.


Next Story