இளநீர் விலை ரூ.35 ஆக நிர்ணயம்
தோப்புகளில் இளநீர் விலை ரூ.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனைமலை
பொள்ளாச்சியில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உட்பட பிற மாவட்டங்களுக்கும் மகாராஷ்டிரா, அசாம், ஹரியானா, உத்தர பிரதேஷ், கர்நாடகா, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களுக்கும் கனரக வாகனங்களில் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 1½ லட்சம் இளநீர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இளநீருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே இளநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
பருவ மழை காலங்களில் தினசரி 5 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. கோடை காலங்களில் 2 முதல் 3 லட்சம் இளநீர் வரை ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் நடப்பாண்டு மரங்களில் நோய்வாய்ப்பட்டு மகசூல் குறைந்ததன் காரணமாக 1½ லட்சம் இளநீர் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது கடுமையான வெயில் காரணமாகவும், தேவை அதிகம் இருப்பதாலும் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் தாங்களாகவே போட்டி போட்டு விலையை ஏற்றுகிறார்கள். எனவே இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.35 என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை கடந்த வார விலையை விட ரூ.250 உயர்த்தப்பட்டு ரூ.14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வெட்டுக்கூலி மற்றும் இதர செலவுகள் வியாபாரியை சார்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.