விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை குறைந்தது
பொள்ளாச்சி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை குறைந்தது. தலா ரூ.22-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆனைமலை
பொள்ளாச்சி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை குறைந்தது. தலா ரூ.22-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இளநீர்
கோவை மாவட்டம் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவை சுற்றி சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் இளநீருக்கு வெளியிடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதன் காரணமாக மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், மராட்டியம், அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் இளநீர் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
விலை குறைந்தது
இந்த நிலையில் கொப்பரை தேங்காய்க்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் இளநீரை அறுவடை செய்து, விற்பனைக்கு அனுப்ப ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கு காரணம், கடந்த சில மாதங்களாக இளநீர் ஒன்று ரூ.28 வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக இளநீருக்கான விலை குறைந்து வருகிறது. இதுகுறித்து இளநீர் விற்பனை சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினமும் 5 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இளநீர் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது. அப்போது அதிகபட்ச விலையே ரூ.21 ஆக தான் இருந்தது. தற்போது போதிய மழை பெய்ததாலும், அதை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி கொண்டதாலும் இளநீர் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது தவிர கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியால் முன்கூட்டியே விவசாயிகள் அறுவடை செய்வதால், இளநீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இளநீர் விலை குறைந்து வருகிறது. தற்போது இளநீர் ஒன்று குறைந்தபட்சம் ரூ.22 என்றும், இளநீர் ஒரு டன் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் என்றும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும் இனிவரும் காலங்களில் வெளியிடங்களுக்கு இளநீர் அனுப்புவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.