வெல்லம் விலை குறைந்தது
பிலிக்கல்பாளையம் சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் வெல்லம் விலை குறைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்
வெல்லம் ஏல சந்தை
பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏல சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
விலை குறைந்தது
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதேபோல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.2,500 வரை விற்பனையாகிறது. வெல்லம் விலை குறைந்்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.