பட்டுக்கூடு விலை ஏறுமுகம்...விவசாயிகள் மகிழ்ச்சி முகம்
கோவை மார்க்கெட்டில் பட்டுக்கூடு கிலோ ரூ.571 -க்கு ஏலம் எடுத்தனர்.
கோவை
கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு மார்க்கெட் உள்ளது. இங்கு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஏலம் நடைபெறும். இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த மார்க்கெட்டில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு பட்டுக்கூடு ஏலம் தொடங்கியது. முன்னதாக ஏராளமான விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து இருந்தனர். அதை ஏலம் எடுக்க கோவை, சத்தி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.571 வரை ஏலம் போனது. ஆனால் கடந்த மாதம் 400-க்கும் குறைவாகதான் விற்பனை செய்யப்பட்டது. பட்டுக்கூடுகளின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து பட்டுக்கூடு மார்க்கெட் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் இன்று (நேற்று) நடந்த ஏலத்துக்கு 741 கிலோ பட்டுக்கூடுகள் கொண்டு வரப்பட்டன. அவை, ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதன் சராசரி விலை கிலோ ரூ.494-ம், அதிகபட்ச விலை ரூ.571 ஆகவும் இருந்தது.
பட்டுப்புழுவின் முக்கிய உணவு மல்பெரி இலைதான். இந்த இலையை கோவை மாவட்டத்தில் 1,800 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். மல்பெரியின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக விவசாயிகளுக்கு 1000 சதுரஅடியில் ஷெட் அமைக்க மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், ஒரு ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய ரூ.10,500-ம், ரூ.52 ஆயிரத்து 500-க்கு புழு வளர்ப்பு தளவாட கருவிகளும் வழங்கப்படுகிறது.
பட்டுப்புழு வளர்க்க முன்வருபவர்களுக்கு 5 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நல்ல விலை கிடைப்பதால் பட்டுக்கூடு உற்பத்தியை விவசாயிகள் அதிகரித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பட்டுக்கூடு விலை ஏறுமுகத்தில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி முகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.