சின்ன வெங்காயம் விலை கடும் உயர்வு
பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. கிலோ ரூ.190-க்கு விற்றதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. கிலோ ரூ.190-க்கு விற்றதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சின்ன வெங்காயம்
தக்காளியை போன்று சின்ன வெங்காயமும் அனைத்து விதமான சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை சதத்தை கடந்தது. அதேபோன்று ஒரு கிலோ சின்ன வெங்காயமும் இரட்டை சதத்தை நெருங்கி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் நேற்று சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பயிரிடுவது குறைந்தது
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பல்லடம், துறையூர், நாமக்கல் மற்றும் கர்நாடகாவில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து 70 சதவீத சின்ன வெங்காயம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீத சின்ன வெங்காயத்தை உள்ளூர் கடைகளுக்கு சில்லறை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விலை போனது. இதனால் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவது குறைந்தது.
விலை உயர்ந்தது
தற்போது குடிமங்கலத்தில் இருந்து மட்டுமே சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவில் இருந்தும் குறைந்த அளவில்தான் சின்ன வெங்காயம் வருகிறது.
இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ ரூ.165 வரை விற்பனை ஆனது. சில்லறை கடைகளில் ரூ.180 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.