கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு- கிலோ ரூ.36-க்கு விற்பனை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்துள்ளது. கிலோ ரூ.36-க்கு விற்பனையானது.
காய்கறி சந்தை
கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்த தக்காளிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சந்தைக்கு கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் உள்ள சொக்கனூர், நெம்பர் 10.முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகளவில் இல்லை.
தற்போது கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள சில கிராமங்களில் இருந்து மட்டுமே தக்காளி வரத்து தினசரி காய்கறி சந்தைக்கு வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 5 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்தது. கடந்த மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு ஏலம் போனது. தற்போது தக்காளி தேவை அதிகரித்து உள்ளதால், நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.
தக்காளி விலை உயர்வு
ஏலத்தில் தக்காளிகளை எடுக்க அதிக வியாபாரிகள் வந்ததால், தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.36-க்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட ஒரு கிலோவுக்கு ரூ.6 அதிகமாகும். தொடர்ந்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் உள்ளதால், தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு, கிழக்கு பகுதியில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. மேற்கு பகுதியில் இருந்து தக்காளி இன்னும் வராததால் தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே, தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர். தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கிணத்துக்கடவு பகுதியில் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.