தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.73-க்கு ஏலம் போனதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.73-க்கு ஏலம் போனதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தக்காளி ஏலம்
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து செல்கின்றனர்.
ஆனால் பருவமழை சரிவர பெய்யாததால், தக்காளிகள் விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் கிணத்துக்கடவு மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள ஒருசில பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளிகள் வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது. இதன் எதிரொலியாக விலை கிடு கிடுவென உயர்ந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இங்கு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 டன் தக்காளிகள் மட்டும் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளிகள் 33 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ தக்காளி 73 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வரை விலை உயர்ந்ததால், தக்காளிகளை கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், தக்காளிகளை விற்பனை செய்ய கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, பருவமழை சரிவர பெய்யாததால், தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை குறைய வேண்டுமென்றால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகள் வர வேண்டும். இல்லையென்றால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால், சில்லறை காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.