ஓணம் பண்டிகையையொட்டி குமரியில் தக்காளி விலை 'கிடு கிடு' உயர்வு கிலோ ரூ.70-க்கு விற்பனை


ஓணம் பண்டிகையையொட்டி குமரியில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு கிலோ  ரூ.70-க்கு விற்பனை
x

ஓணம் பண்டிகையையொட்டி, குமரி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஓணம் பண்டிகையையொட்டி, குமரி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது.

காய்கறி விலை உயர்வு

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளது. அதேநேரத்தில் மழையால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. குமரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிேலா ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது. இதுபோல் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், கேரட் விலை உயர்ந்து நேற்று ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு சிறு சந்தைகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

வரத்து குறைவு

காய்கறி விலைஉயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

வடசேரி கனகமூலம் சந்தைக்கு தினமும் ஓசூரில் இருந்து தக்காளி மற்றும் பீன்ஸ் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் காவல்கிணறு மற்றும் குமாி மாவட்டத்தின் சில இடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக வருகிறது. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. பீன்சு தற்போது சீசன் இல்லை.

மேலும் ஓணம் பண்டிகையையொட்டி தக்காளி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், விலை உயர்ந்து வருகிறது. பண்டிகை முடிவடைந்தவுடன் இவற்றின் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

கத்தரிக்காய்-ரூ.25, கேரட்-ரூ.110, முட்டைக்கோஸ்-ரூ.36, சேனைக்கிழங்கு-ரூ.25, வெண்டைக்காய்-ரூ.40 முதல் ரூ.50 வரை, வெள்ளரிக்காய்-ரூ.40, இஞ்சி-ரூ.75, முருங்கைக்காய்-ரூ.110, புடலங்காய்-ரூ.250, தடியங்காய்-ரூ.15, சுரக்காய்-ரூ.30, பூசணிக்காய்-ரூ.15, சவ்சவ்-ரூ.30, முள்ளங்கி-ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.


Next Story