தஞ்சையில் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை கிடு கிடு உயர்வு


தஞ்சையில் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை கிடு கிடு உயர்வு
x

தஞ்சையில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்னவெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் விலையும் குறையவில்லை. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்னவெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் விலையும் குறையவில்லை. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

காய்கறிகளின் விலை உயர்வு

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைந்ததும், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதில் தக்காளி, இஞ்சி மற்றும் சின்னவெங்காயத்தின் விலை தான் கடுமையாக உயர்ந்து வருகிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே உள்ள காமராஜர் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கிலோ ரூ.130-க்கு விற்பனை

தஞ்சை மார்க்கெட்டுக்கு தற்போது வழக்கமாக தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் (25 கிலோ கொண்ட பெட்டி) பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

தற்போது தஞ்சைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மட்டும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. அங்கும் பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தினமும் 1200 பெட்டிகளுக்கும் குறைவாகவே தக்காளி விற்பனைக்கு வருகிறது.

தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி

இதனால் நேற்று தக்காளி வாங்க வந்த இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் சின்னவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பீன்ஸ் விலையும் குறையாமல் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் காய்கறிகளை குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர்.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (ஒரு கிலோ) வருமாறு:-

கத்தரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.50, அவரைக்காய் ரூ.70, சவ்சவ் ரூ30, முள்ளங்கி ரூ.25, பச்சை மிளகாய் ரூ.90, பீன்ஸ், ரூ.100, காலிபிளவர் ரூ.55, முட்டைக்கோஸ் ரூ.30, முருங்கைக்காய் ரூ.60, புடலங்காய் ரூ.50, குடைமிளகாய் ரூ.90, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.25, சின்னவெங்காயம் ரூ.160, பல்லாரி ரூ.30, தக்காளி ரூ.130, சிறிய ரக தக்காளி ரூ.120.

இது குறித்து வியாபாரி கூறுகையில், தக்காளிவிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று விலை கிலோ ரூ.130-ஆக உயர்ந்தது. அதிலும் தஞ்சை மார்க்கெட்டுக்கு பெரிய ரக தக்காளி வரத்து இல்லை. குறைந்த அளவே வருகின்றன. சாதாரண மற்றும் சிறிய ரக அளவிலான தக்காளி மட்டுமே அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன என்றார்.


Next Story