இந்தியாவை மாற்றிக்காட்டுவோம் என்று பிரதமர் கூறியது பாடங்களில் பாரதம் என பெயர் மாற்றுவதை தானா?-உதயநிதி ஸ்டாலின் கேள்வி


இந்தியாவை மாற்றிக்காட்டுவோம் என்று பிரதமர் கூறியது பாடங்களில் பாரதம் என பெயர் மாற்றுவதை தானா?-உதயநிதி ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

இந்தியாவை மாற்றிக்காட்டுவோம் என பிரதமர் கூறியது பாடங்களில் பாரதம் என பெயர் மாற்றுவதை தானா? என்று விருதுநகர் தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

விருதுநகர்

விருதுநகர்,

செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகரில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் ராமமூர்த்தி ரோட்டில் பிரமாண்ட பந்தலில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்கள்.

மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவருக்கு வெள்ளி செங்கோல் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

தி.மு.க. இளைஞர் அணி வெள்ளி இலச்சினை மற்றும் தி.மு.க. கொடி ஏந்திய உதயநிதி ஸ்டாலின் போன்ற வடிவமைப்பும் வழங்கப்பட்டது. தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டிற்காக விருதுநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடியும், விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

எழுச்சி கூட்டம்

நான் இதுவரை பல மாவட்டங்களில் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் மிகச்சிறப்பாக எழுச்சி மிகுந்த கூட்டமாக இக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1968-ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக உழைத்து 2021-ம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்-அமைச்சராக ஆகி உள்ளார். தி.மு.க.வில் 22 அணிகள் உள்ளன. இதில் முதன்மையான அணி இளைஞர் அணி என்று தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 1981-ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து கட்சிகளிலும் இளைஞர் அணி இருந்தாலும் தி.மு.க. இளைஞர் அணிதான் முதன்மையாக உள்ளது. இளைஞர் அணியில் உழைப்பவர்களுக்கு உயர்வு உண்டு.

இங்கு எனக்கு நினைவுப்பரிசு கொடுத்தவுடன் இதோடு முடித்துக் கொள்வார்களோ என்று நினைத்தேன். ஆனால் மாவட்ட தி.மு.க. சார்பில் 2-வது தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதியும் இளைஞர் அணி சார்பில் ரூ.20 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் விலக்கே இலக்கு

நமக்கு நீட் விலக்கு என்பதே இலக்காகும். நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்த நிலையில் 22 மாணவ-மாணவிகளின் உயிரை பறிகொடுத்துள்ளோம். அரியலூர் அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீசுவரன் வரை மருத்துவக் கனவு கலைந்ததால் உயிரை மாய்த்து உள்ளனர். ஜெகதீசுவரன் குடும்பமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே நீட் தேர்வு விலக்கு கோரி உங்களது கையில் வழங்கப்பட்டுள்ள தபால் அட்டையில் கையெழுத்திட்டு அனுப்பி வையுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினரிடமும் கையெழுத்து பெற்று அனுப்பி வையுங்கள். ஒரு கோடி ேபரிடம் கையெழுத்து பெற்று இளைஞர் அணி மாநாட்டின்போது முதல்-அமைச்சரிடம் வழங்க உள்ளோம். நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அதில் பேசியபோது, அ.தி.மு.க.வினரும் நீட் விலக்குகோரி எங்களுடன் சேர்ந்து போராடுங்கள். நீட் தேர்வு விலக்கு கிடைத்தால் அந்த வெற்றியின் பெருமையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டேன். இப்போதும் அதையே குறிப்பிடுகிறேன்.

2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. எந்த மாநாடு என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் எதற்காக மாநாடு நடத்தப்பட்டது என்றே தெரியாது. ஆனால் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநாடு கொள்கைக்காக நடத்தப்படுகிறது. ராணுவ கட்டுக்கோப்போடு இந்த மாநாடு சேலத்தில் நடத்தப்படும்.

உரிமைத்தொகை

வாக்குறுதி அளித்தபடி மகளிர் உரிமைத்தொகையை முதல்-அமைச்சர் வழங்கிவிட்டார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற உடன் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஆனால் இதுவரை 15 பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. அவர் எங்கு சென்றாலும், வட மாநிலங்களில் பேசும்போது கூட, தமிழக முதல்-அமைச்சர் பற்றியும், என்னை பற்றியும்தான் பேசுகிறார். மக்களுக்காக எதையும் செய்யாமல் அவரது நண்பர் அதானிக்காக அனைத்தையும் செய்துள்ளார். எல்லா நிலைகளிலும் அதானியை பிரதானமாக கொண்டே செயல்பட்டுள்ளார்.

முறைகேடு

மத்திய தணிக்கை துறையான சி.ஏ.ஜி. ரூ.7 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூ.280 கோடி செலவு என எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ரமணா படத்தில் சித்தரிப்பது போல 88 ஆயிரம் பேர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இதுபற்றி பிரதமர் மோடியோ, மத்திய அரசோ எதுவும் கூற தயாராக இல்லை. பிரதமர் மோடி இந்தியாவை மாற்றிக்காட்டுேவன் என்றார். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியா என்று இருப்பதை பாரதம் என்று மாற்றுகிறார். இதுதான் பிரதமர் குறிப்பிட்ட மாற்றமா? நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் ெவன்று, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வாகை சூடுேவாம். அதற்காக நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தென்காசி தொகுதி எம்.பி.யும் தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளருமான தனுஷ்குமார் வரவேற்று பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜா, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள், நகரச்செயலாளர் தனபாலன், பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், நிர்வாகிகள் பெருமாள் சாமி, கண்ணன், ராமமூர்த்தி, பாண்டி, குருசாமி, முத்துமாணிக்கம், விஜய கண்ணன், சந்திர கார்த்தி, மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story