இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; அமைச்சர் பேச்சு


இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2022 4:03 PM GMT (Updated: 16 Oct 2022 5:10 PM GMT)

இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

திருவண்ணாமலை

இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

மாநில இளையோர் தடகள போட்டி

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவரும், மாநில துணைத்தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க செயலாளர் லதா, சுகாதார துறை துணை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினர்.

அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 380 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 25 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என 75 பதக்கங்களை பெற்றனர்.

இந்தியாவிலேயே 5-வது இடத்தை பெற்று தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்து உள்ளனர்.

முதல்-அமைச்சரின் கனவு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விளையாட்டு என்பது நாம் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. உடல் உறுதிக்காகவும் விளையாட வேண்டும். எனவே அத்தனை பேரும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்றைக்கு வீதிகள் எங்கும் மருத்துவமனைகள் அதிகரித்து உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் மருத்துவமனைகள் குறைந்தே காணப்பட்டது. ஏனென்றால் கடந்த காலங்களில் வீதிகளில் விளையாட்டு மைதானங்கள் இருந்தது. ஆனால் இன்றைக்கு விளையாட்டுகள் குறைந்து விட்டதால் மருத்துவமனைகள் அதிகரித்து விட்டது.

தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்று இந்த 15 மாத காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளார். தற்போது வரை சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற சுமார் 1,330 பேருக்கு முதல்- அமைச்சர் சுமார் ரூ.36 கோடி மதிப்பில் பரிசு தொகை வழங்கி உள்ளார்.

இந்த மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெறுகின்ற வீரர்கள் நவம்பர் மாதத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ள 37-வது இளையோருக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கும், விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்தியாவின் விளையாட்டு தலைமையிடம் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதே முதல்- அமைச்சரின் கனவு. அந்த கனவை நோக்கி நாம் அனைவரும் பயணிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அணிவகுப்பு மரியாதை

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் மெய்யநாதன் ஏற்று கொண்டார்.

பின்னர் தடகள போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். தடகள ஜோதியை ஏற்றிய பின்னர் அவர் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் தமிழகத்தில் இருந்து 3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகள் 14, 16, 18, 20 என்ற வயதின் அடிப்படையில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், பல்வேறு ஓட்டப் பந்தையங்கள், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் என ஆண்களுக்கு 64 வகையிலான போட்டிகளும், பெண்களுக்கு 62 வகையிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டிகள் வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டிகளும் முடிய, முடிய வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், மாவட்ட தடகள சங்க துணை செயலாளர் வடிவேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story