இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை


இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை
x
தினத்தந்தி 16 Feb 2023 6:45 PM GMT (Updated: 16 Feb 2023 6:45 PM GMT)

திருவாடானை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (வயது 90). இவர் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் இவரது உறவினர்கள் வழக்கமாக அடக்கம் செய்யும் இடமான அருகில் உள்ள சிறுக்காரை கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கு சிறுக்காரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இது குறித்து தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் தமிழ்செல்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் மற்றும் வருவாய் துறை, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிறுக்காரை கிராமத்தினர் தங்களது கிராமத்துக்கு குடிநீர் இந்த கண்மாயிலிருந்து தான் செல்கிறது என்றும் இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்தால் குடிநீர் மாசு ஏற்படும். எனவே இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தற்போது இறந்த மாரியின் உடலை மட்டும் சிறுக்காரை கண்மாய் கரையில் அடக்கம் செய்வது என்றும் இனிவரும் காலங்களில் உயிரிழப்பவர்களின் சடலங்களை பழங்குளம் பகுதியிலேயே அந்த குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு என ஆதிதிராவிட நலத்துறை மூலம் தனியாக மயானம் உருவாக்கித் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இறந்த முதியவர் மாரியின் பிணம் தாசில்தார், துணை சூப்பிரண்டு மற்றும் காவல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story