குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2023 8:45 PM GMT (Updated: 28 Jun 2023 8:46 PM GMT)

கூடலூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

கூடலூரில் நகராட்சி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதற்கு தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் நஞ்சுண்டன், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் வெண்ணிலா:

எனது வார்டில் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையாளர்: விரைவில் நிதி ஒதுக்கப்படும்.

கவுன்சிலர் தனலட்சுமி: எனது வார்டில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து விட்டது. அது சீரமைக்கப்படவில்லை. ஆணையாளர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிக் மாயார் குடிநீர் திட்டம்

கவுன்சிலர் சையத் அனூப்கான்:

எனது வார்டில் நூலக கட்டிடம் இடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்டது. அந்த இடத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கவுன்சிலர் உஸ்மான்:

புதிதாக திட்டங்கள் கொண்டுவர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தொடர் நடவடிக்கை எடுப்பதில்லை. சிக் மாயார் குடிநீர் திட்டமும் ஆய்வில் மட்டுமே உள்ளது.

கவுன்சிலர் வெண்ணிலா: சிக் மாயார் குடிநீர் திட்டத்தை விட மூலக்காட்டில் குடிநீர் திட்டம் தொடங்கினால் கோடை காலத்திலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

117 தீர்மானங்கள்

கவுன்சிலர் சையத் அனூப்கான்:

நகருக்குள் தெருநாய்கள், கால்நடைகள் தொல்லை அதிகரித்துள்ளது. அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர்: கால்நடைகளை பிடித்து காப்பகத்தில் அடைத்தால் உரிய நேரத்தில் தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் வழங்க வேண்டும். இந்த பணி மேற்கொள்ள பணியாளர் இல்லை. கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

கவுன்சிலர் ஆக்னஸ் கலைவாணி: அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நகராட்சி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர்: தண்ணீர் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பின்னர் 117 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு மன்ற ஒப்புதல் பெறப்பட்டது.


Next Story