டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பேராசிரியர் பரிதாப சாவு
நெல்லை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
உதவி பேராசிரியர்
பாளையங்கோட்டை சேவியர் காலனி பிரின்ஸ் காட்டேஜ் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பீட்டர் துரைராஜ். இவருடைய மகன் பிரின்ஸ் வில்டன் (வயது 27). இவர் தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நாற்கர சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டிராக்டர் மீது மோதி பலி
அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரின்ஸ் வில்டனை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரின்ஸ் வில்டன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஓட்டி வந்த வேப்பங்குளத்தைச் சேர்ந்த ராஜாமணி (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.