மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சோலை மரக்காடு அமைக்கும் திட்டம் தொடக்கம்

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சோலை மரக்காடு அமைக்கும் திட்டம் தொடக்கம்
கோத்தகிரி
பொதுமக்களிடையே காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக சிறு சோலை காடுகள் அமைக்கும் திட்டத்தை கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செயல்படுத்த இயற்கை ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதற்கென டெல்லியை சேர்ந்த விஞ்ஞானி சாந்தகுமார், மைசூரைச் சேர்ந்த விஞ்ஞானி சிரிஷா, ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கல்வி மற்றும் விழிப்புணர்வு உபயோகத்திற்காக ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக சோலை மரங்கள், புற்கள், மூங்கில் உள்ளிட்டவற்றை நடவு செய்து சிறு சோலை மரக் காடு அமைக்கவுள்ளனர். மேலும் இந்த சோலையை அக்குழுவினர் 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் உள்ளனர். இதன் துவக்க விழா நேற்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில்
இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டு சோலை மர நாற்றுகளை நடவு செய்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த குழுவினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காடுகள் வளர்க்க வேண்டிய அவசியம், காடுகள் வளர்த்தால் பருவநிலை மாற்றத்தை தடுக்கும், காடுகள் தண்ணீர் தொட்டியாகவும், மண் அரிப்பைத் தடுக்கும், வெள்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், ஆக்சிஜன் தயாரிப்பிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.






