பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும்-95 வயதான மூதாட்டி கலெக்டரிடம் மனு
பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும் என்று 95 வயதான மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி பல்கீஸ் அம்மாள். இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தனது மகன் அல்லாஹீர் என்பவர் தன்னை கடைசி காலத்தில் பராமரிப்பார் என்று நம்பி தனக்கு சொந்தமான 2 நிலம் மற்றும் வீட்டினை இனாம் செட்டில்மென்ட் எழுதி கொடுத்தேன். சொத்தை பெற்றுக்கொண்ட பின்னர் வயதான தாய் என்றும் பாராமல் என்னை பராமரிக்காமல் கவனிக்காமல் சாப்பாட்டிற்கு வழி செய்யாமல் தவிக்க விட்டுவிட்டான். இதனால் ஆதரவின்றி கடைசி காலத்தில் கையேந்தி பிழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்நிலையில் நான் எழுதிக்கொடுத்த நிலத்தினை விற்க ஏற்பாடு செய்து அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்து என்னை வெளியேற வற்புறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறான். என்னை கடைசி காலத்தில் பராமரிப்பான் என்றுதான் அவனுக்கு எழுதிக்கொடுத்தேன். தற்போது அதற்கு மாறாக நடப்பதால் நான் அவனுக்கு எழுதிக்கொடுத்த சொத்தினை ரத்து செய்து மீண்டும் எனக்கு கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.