கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் வரை போராட்டம் தொடரும்


கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் வரை போராட்டம் தொடரும்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்வரை போராட்டம் தொடரும் என எச்.ராஜா கூறினார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்வரை போராட்டம் தொடரும் என எச்.ராஜா கூறினார்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புதிய பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. சார்பில் தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. அரசை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை கட்டக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பொறுப்பாளர் தங்க வரதராஜன், வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமாரிடம் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என கேட்கவில்லை. கர்நாடகாவில் பேசி தண்ணீர் கேட்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுக்கிறார்.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி இருந்தவரை காவிரி நீர் பிரச்சினை ஏற்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்தது முதல் காவிரி நீர் பிரச்சினையால் டெல்டா விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு தி.மு.க. நல்லது நினைக்கவில்லை.

போராட்டம் தொடரும்

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வரை அல்லது தி.மு.க. அரசை நீக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும், மேலும் இது தொடர்பாக டெல்டா பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். கொள்ளிடத்தில் வெள்ள மணல் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ.750 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த கமிட்டியில் பா.ஜ.க.வை சேர்ந்த கருப்பு முருகானந்தம், அகோரம் ஆகியோரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் ஆனந்தராஜ், மனோஜ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story