ஆய்வு பணிக்கு சென்ற நகராட்சி தலைவியை பொதுமக்கள் முற்றுகை
சோளிங்கரில் ஆய்வு பணிக்கு சென்ற நகராட்சி தலைவியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளது. முதல் கட்டமாக 7-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணியை நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில், ஆணையாளர் கன்னியப்பன், பொறியாளர் ஆசீர்வாதம் ஆகியோர் பார்வையிட்டனர். கவுன்சிலர்கள் அசோகன், சிவானந்தம், விஜயலட்சுமி, கணேசன், மோகனா, பணி ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
அம்மன்குளம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட சென்ற நகராட்சி தலைவரை 7-வது வார்டு பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்குவதில்லை, தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரும் சீராக வருவதில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது என்றும், தினசரி குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது பொன்னை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் முடிவடைந்ததும் பற்றாக்குறை இன்றி சீராக வழங்கப்படும் என்று நகதராட்சி தலைவர் உறுதியளித்து, அந்தப் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.