ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பொதுமக்கள்

ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்.
இன்று ஆயுத பூஜை
ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.
இதற்காக அரியலூர் நகரில் நேற்று ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழம், பொரிகடலை, வாழைக்கன்று, மாவிலை, தோரணம், வண்ண காகிதமலர்கள் உள்ளிட்டவை ஏராளமான கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்ததால் வியாபாரம் குறைவாக இருந்தது. பூமாலை, கதம்பம், இலைகளும் 3 மடங்கு விலை உயர்ந்து காணப்பட்டன. பொரி கடலை, அவல், சர்க்கரை அடங்கியவை அடங்கிய பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டன. பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.25-ல் இருந்து விலை உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பழங்களில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.160-க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்றால் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படாமல் இருந்தது. இருந்தபோதும் இந்த ஆண்டு விலைவாசி உயர்வாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் ஆயுத பூஜை விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கூறினார்கள்.
விலை உயர்வு
வியாபாரி கணேசன்:- மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு கொண்டைக்கடலை, பட்டாணி, அவல்பொரி ஆகியவை அதிக அளவில் விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் வியாபாரம் மந்தமாக உள்ளது.
பூ வியாபாரி ரேவதி:- பூ விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதால் 10 முழம் பூ வாங்குபவர்கள் 5 முழம்தான் வாங்குகின்றனர். மல்லிகை பூ ஒரு முழம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வியாபாரம் குறைவாகவே உள்ளது.
பொருட்கள் வாங்க வந்த ஆனந்தன்:- நகரில் வழக்கமாக பல இடங்களில் தற்காலிக தடைகள் அமைக்கப்பட்டு, ஆயுத பூஜைகளுக்கு பொருட்கள் விற்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வாழைக்கன்றுகள், பூ, பழம் விற்கும் கடைகள் குறைவாகவே உள்ளது. அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. அதனால் பொருட்கள் வாங்குபவர்கள் குறைந்த அளவே வருகின்றனர்.






