புதிய ஊராட்சி ஒன்றியம் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கருத்துக்கேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குவது குறித்து பொதுமக்கள் முதல் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
60 கிராம ஊராட்சிகள்
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின்படி ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குவது தொடர்பாக முதல் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சிகளை 2 ஆக பிரித்து ரிஷிவந்தியம் மற்றும் வானாபுரம் ஆகிய ஊராட்சிகளின் தலைமையிடத்தில் தனித்தனியே புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
கருத்துகளை தெரிவிக்கலாம்
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின்படி புதிய ஊராட்சி ஒன்றியங்கள் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்படும். ஒன்றியங்களை பிரிப்பது தொடர்பான கருத்துக்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்திலோ வழங்கலாம்.
இவ்வாறு அவா் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.