கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து குதறியதா?


கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து குதறியதா?
x

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் தோட்டத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்யை சிறுத்தை கடித்து குதறியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பூர்

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் தோட்டத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்யை சிறுத்தை கடித்து குதறியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 7-ந் தேதி சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து வலசுபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதன் பின்னர் கள்ளிப்பாளையத்தை அடுத்த வலையபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அலகுமலை பகுதியில் ஒரு தோட்டத்தில் கன்று குட்டியை சிறுத்தை தாக்கியதாக தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து அவினாசி பாளையம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியின் கால் பகுதியில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் அச்சம்

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இது சிறுத்தை தாக்கியதற்கான அறிகுறி இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்வதுடன், கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் உண்மையிலேயே இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள ஒரு விதமான அச்ச உணர்வு நீங்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


1 More update

Next Story