பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை


பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
x

பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

திருப்பத்தூர்

பன்றிக் காய்ச்சலுக்கு வியாபாரி பலி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மளிகைக் கடை நடத்தி வந்த ராமமூர்த்தி (வயது 50) என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலை 6 மணிக்கு நியூடவுனின் உள்ள அவரது வீட்டின் அருகே கொண்டுவரப்பட்டது. சாலையிலேயே ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு அவரது உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே, நகராட்சி ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்து உடன் சென்று அங்குள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். நகராட்சி பணியாளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி கவச உடைகள் அணிந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

பயப்பட தேவையில்லை

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றது. அதனால் உரிய வழிகாட்டுதல்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் எங்கெங்கு பயணம் செய்தார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

அதேபோல் இந்த நோய்க்கான தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. அது பொது மக்களுக்கு தேவைப்பட்டால் அளிக்கப்படும். இது தொடர்பாக கடைகளை மூடச்சொல்லவில்லை. போதிய அளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story