கலவை எந்திரத்தை சாலையில் நிறுத்தி பொதுமக்கள் மறியல்
கள்ளக்குறிச்சி அருகே மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலவை எந்திரத்தை சாலையில் நிறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ரோடு பரமநத்தம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் வகையில் பி.எம்.ஏ.ஜி.ஒய். திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் அங்கு புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மூரார்பாளையத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் இடத்தின் அருகில் ஆக்கிரமிப்பு செய்தார். மேலும் அங்கு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை கட்டவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ரோடு பரமநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று முரார்பாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் கலவை எந்திரத்தை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி கட்டும் பணியை தடுத்துவரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பணியை விரைந்து முடித்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதனை கேட்ட போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.