கிராமத்திற்கு வராத பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்


கிராமத்திற்கு வராத பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்
x

குடியாத்தம் அருகே கிராமத்திற்கு வராத அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வேலூர்

டவுன் பஸ்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சேம்பள்ளி ஊராட்சி கொட்டாரமடுகு கிராமம் கடைக்கோடி கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர டவுன் பஸ்சை நம்பியுள்ளனர். குடியாத்தம் நகரில் இருந்து பெரும்பாடி, அக்ராவரம், சேம்பள்ளி, ஜிட்டப்பள்ளி வழியாக கொட்டாரமடுகு கிராமத்திற்கு தினமும் 9 முறை டவுன் பஸ் வந்து சென்று கொண்டிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஜிட்டப்பள்ளி கிராமத்திற்கும், கொட்டாரமடுகு கிராமத்துக்கும் இடையே ஆறு உள்ளது. ஆற்றில் வெள்ளம் செல்லும் போது டவுன் பஸ் செல்ல சிரமமாக இருப்பதாகக் கூறி கொட்டாரமடுகு கிராமத்திற்கு பஸ் இயக்காமல் ஜிட்டப்பள்ளி வரை மட்டுமே இயக்கி வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆற்றில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக ஜிட்டப்பள்ளி வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொட்டாரமடுகு கிராமத்திற்கு வருவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

இந்தநிலையில் நேற்று மதியம் ஜிட்டப்பள்ளி கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை 200-க்கும் மேற்பட்டோர் திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சவூந்தர்ராஜன், காமராஜ், ராஜசேகர், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, திருநாவுக்கரசு, கோட்டீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனி ஒவ்வொரு முறையும் டவுன் பஸ் கொட்டாரமடுகு கிராமம் வந்து செல்லும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை கிராம மக்கள் விடுவித்தனர்.


Related Tags :
Next Story