பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் கடலோர பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் பாலசுப்பிரமணியம், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாண்டஸ் புயல் காரணமாக, 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளதால் கிள்ளை, முடசல்ஓடை பகுதியில் அனைத்து படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு உள்ளிட்ட பணிகளுக்காக சிதம்பரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர்.
223 தங்கும் இடங்கள்
மேலும், மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு, 223 தங்கும் இடங்கள், அடிப்படை வசதிகளோடு தயார் நிலையில் வைத்துள்ளோம். ஒவ்வொரு புயல் பாதுகாப்பு மையத்திலும் பொறுப்பாளர் அதிகாரிகள் ஒருவரை நியமித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கு சென்று தங்க அறிவுறுத்தியுள்ளோம். அவர்களுக்கு தேயைான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவை
பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். குறிப்பாக தங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஊரக வளரச்சி துறை மூலம் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம முழுவதும், மின் கம்ப சேதம் மற்றும் மின் துறை பாதிப்புகளை உடனக்குடன் சீர் செய்யும் வகையிலும் 26 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.