கொடுமுடியில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி


கொடுமுடியில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x

கொடுமுடியில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கொடுமுடியில் காங்கேயம் செல்லும் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் கடந்த 16 ஆண்டுகளாக மின்வாரிய அலுவலகம் இயங்கி வந்தது. இந்த மின்வாரிய அலுவலகத்தின் கீழ் 12 ஆயிரம் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் மின்வாரிய அலுவலகம் திடீரென சாலைப்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் என அனைத்து மின் பயனீட்டாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஒத்துழைப்பு தருகிறோம்

கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி சுப்பிரமணியம்:-

கொடுமுடி பகுதிகளில் உள்ள செயல்படாத அல்லது பயன்படாத அரசு கட்டிடங்களில் சாத்திய கூறுகளை ஆராய்ந்து மின்வாரிய அலுவலகத்தை கொடுமுடியிலேயே இடமாற்றம் செய்திருக்கலாம். இது சம்பந்தமான எந்த உதவியையும், ஒத்துைழப்பையும் வழங்க தயாராக இருக்கிறோம். உடனே செல்ல முடியாத இடத்தில் மின்வாரிய அலுவலகம் மாற்றப்பட்டதால் அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்துள்ளனர்.

வசூல் அலுவலகம்

கொடுமுடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் சுப்பிரமணி:-

40 சதவீத பொதுமக்கள் மின் கட்டணங்களை ஆன்லைனிலோ, செல்போன் மூலமாகவோ கட்டி விடுகிறார்கள். ஆனால் ஏனைய மக்கள் நேரடியாக சென்று மின் கட்டணங்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொடுமுடியில் இருந்து சாலைப்புதூர் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து மின்வாரிய அலுவலகம் செல்ல போக்குவரத்து வசதி இல்லாத வழியில் 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்காக சாலைப்புதூரிலேயே மின்வாரிய அலுவலகம் இருக்கட்டும். ஆனால் கட்டணம் செலுத்த வசதியாக வசூல் அலுவலகம் மட்டுமாவது கொடுமுடியில் செயல்பட்டால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.

கூலி தொழிலாளர்களுக்கு சிரமம்

கொடுமுடி அனைத்து வட்டார வணிகர்கள் சங்க தலைவர் பத்ரி நாராயணன்:-

வாடகை உயர்த்தி கேட்டதால் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஏற்கனவே கொடுமுடியில் இருந்து நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றை சாலைப்புதூருக்கு இடமாற்றம் செய்துவிட்டனர். இப்போது போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் மின்வாரிய அலுவலகத்தையும் இடம் மாற்றம் செய்துள்ளனர். இதனால் கூலி வேலைக்கு செல்லும் மக்கள்தான் மின் கட்டணம் செலுத்த மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுவாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் கொடுமுடி மின்வாரிய அலுவலகத்தை சாலைப்புதூருக்கு மாற்றியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். மீண்டும் கொடுமுடியில் மின்வாரிய அலுவலகமோ அல்லது மின்கட்டண வசூல் அலுவலகமோ அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story