வெளியான என்எல்சி பொறியாளர் பட்டியல்.. அதிர்ச்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்..!
என்எல்சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நெய்வேலி,
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிதாக பொறியாளர்களை தேர்வு செய்தது. இதுதொடர்பான பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்எல்சி நிறுவனம் சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தது.
ஆனால் இதற்கு எதிராக தமிழகத்தைச் சாராத பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிலங்களை வழங்கியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.