"கலைஞரின் பண்பு முதல்-அமைச்சரிடம் உள்ளது": கமல்ஹாசன் பேச்சு
நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி கலைஞர் என்று கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
சென்னை கிண்டியில் 'கலைஞர் 100 விழா' சென்னை கிண்டியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகரும், ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது;
திரைப்படத்துறையினர் அனைவருக்கும் வணக்கம். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இருக்கும் மேடையில் நான் எப்போதும் ஓரமாக தான் இருப்பேன். அதனால் தான் நடு மேடையில் நிற்காமல் தொகுப்பாளர் பேசும் இடத்தில் இருக்கிறேன். என்னுடைய தமிழ் ஆசான்கள் கருணாநிதி, நடிகர் சிவாஜி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்.
கருணாநிதி தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்துவார். அவர் நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது. சிறு வயதில் என் அக்காவிடம் கருணாநிதி போன்று முடி வைத்து விடுங்கள் என்று சொல்லுவேன்.
அவர் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார். அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன். தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எதையும் விடக்கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்று கொண்ட பாடம். அதைதான் நான் என்னுடைய வாழ்க்கையில் பின் தொடருகிறேன். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி தந்த அரசியல் பாண்புக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுக்கொண்டது என்பது நமக்கு தெரியும். கலைஞரின் பண்பு முதல்-அமைச்சரிடம் உள்ளது. " இவ்வாறு அவர் பேசினார்.