புதிய பஸ்நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்- சட்டசபை உறுதிமொழி குழு


புதிய பஸ்நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்- சட்டசபை உறுதிமொழி குழு
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சட்டசபை உறுதிமொழி குழு உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சட்டசபை உறுதிமொழி குழு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை உறுதிமொழி குழு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித திட்டங்களை சட்டசபை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். குழுத்தலைவரும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையிலான 5 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய சட்டசபை உறுதிமொழி குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறை மணக்குடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை சட்டசபை உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆய்வு செய்ய வேண்டும்

புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் கம்பியின் தடிமன் மெல்லியதாக உள்ளது. இதனை அரசு பொறியியல் துறையினர் அனுமதித்து இருந்தாலும், நீண்ட கால தேவைக்காக இதைவிட தடிமனான கம்பியை பயன்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வுசெய்து சட்டசபை உறுதிமொழி குழுவினருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த பணியை கண்காணிக்க வேண்டிய நகராட்சி பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் மயிலாடுதுறை நகராட்சியில் காலியாக உள்ளதால், கட்டுமான பணி தரமாக இருக்காது என குழு கருதுகிறது. எனவே, மாவட்ட கலெக்டரின் நேரடி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்ற பரிந்துரையை குழு வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடியிருப்புகள்

முன்னதாக தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, நிவேதா முருகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story