விழுப்புரம் அருகே ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி; வாலிபர் படுகாயம்
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரவுடி வெடிகுண்டு வீசினார். இதில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கத்தியுடன் வலம் வந்த ரவுடி
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. பிரபல ரவுடியான இவர், அந்த கிராம மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதையும், வீண் சண்டையிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட 5 பேர் சமீபத்தில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அறிந்த நாராயணசாமி, 5 பேரையும் மிரட்டி அந்த வழக்கை வாபஸ் பெற செய்துள்ளார். இதனால் அவரிடம் கிராம மக்கள் யாரும் பேசுவதில்லை. இருப்பினும் அவர் கத்தியுடன் வலம் வந்துள்ளார்.
நாட்டு வெடிகுண்டு வீச்சு
இந்த நிலையில் நாராயணசாமி நேற்று மதுபோதையில் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் கண்டம்பாக்கத்தில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அதே கிராமத்தை சேர்ந்த பரணிதரன்(வயது 22) உள்பட 5 பேர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களை எழுப்பி தகராறில் ஈடுபட்ட நாராயணசாமி, என் மீதான பயம் போய் விட்டதா? என்று கூறினார். மேலும் தான் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசினார்.
வாலிபர் படுகாயம்
அந்த நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் பரணிதரன் படுகாயமடைந்தார். மற்ற 4 பேரும் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னர் ரவுடி நாராயணசாமியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து, பரணிதரனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரணிதரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி நாராயணசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.