தாயின் தலையில் கத்தியால் வெட்டிய ரவுடிக்கு வலைவீச்சு


தாயின் தலையில் கத்தியால் வெட்டிய ரவுடிக்கு வலைவீச்சு
x

பெரம்பலூரில் தாயின் தலையில் கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

தாயார் குறித்து அவதூறு

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு, சமத்துவபுரம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பெரியக்கா (வயது 40). இவர்களது மூத்த மகன் நவீன் குமார் (24). இவர் மீது 2 கொலை வழக்குகளும், வேறுசில குற்ற வழக்குகளும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. வினோத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மத்திய சிறையில் நவீன் குமார் இருந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே நவீன் குமாரின் நண்பர்கள் அவரது தாயார் பெரியக்காவை பற்றி அவதூறாக பேசி உள்ளனர்.

வலைவீச்சு

இதனால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் நேற்று முன்தினம் இரவு பெரியக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெரியக்காவின் நடுதலையில் நவீன் குமார் வெட்டினார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் வலியால் துடித்துள்ளார். இவரது அலறல் சத்தத்தை கேட்ட மற்ற மகன்களான பிரவீன் குமார், பிரகாஷ் ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நவீன் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பெரியக்காவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி நவீன்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story