அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ரெயில்-பஸ்கள்


அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ரெயில்-பஸ்கள்
x

தொடர் விடுமுறை எதிரொலியாக பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையுடன் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து கொண்டதால் நேற்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆனது. இதையொட்டி விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அதேபோல் வெளியூர்களில் வேலை செய்வோரும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு நேற்று முன்தினமே செல்ல தொடங்கினர்.

இதற்காக கடந்த மாதமே பலர் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், பஸ்களிலும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது ஏற்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்தே மக்கள் குவியத்தொடங்கினர். அந்த கூட்டம் மாலையில் அதிகமாகி இரவில் அலைமோத தொடங்கியது.

இதனால் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன. மேலும் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டிய ஒருசில பஸ்கள், திண்டுக்கல்லுக்கு வராமலேயே சென்றன. இதனால் இரவு பஸ்களில் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பலர் பயணம் செய்தனர். மேலும் பஸ்நிலையத்தில் விடிய, விடிய பஸ்சுக்காக பலர் காத்திருந்தனர். அதேபோல் திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பின. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி மக்கள் பயணம் செய்தனர். இதனால் ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் நிரம்பி வழிந்தன. இதற்கிடையே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரெயில், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story