மீட்கப்பட்ட சிலைகளை மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே நிறுவ வேண்டும்
கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.
சிவனடியார்கள் திருக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா வாணியம்பாடியில் ஜனதாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலக சிவனடியார்கள் திருக்கூட்ட பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற சிலைகள் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு, சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் பராமரிப்பின்றி காணாமல் போய் உள்ளது. சோழபுரம் (சோழவரம்) என்ற பகுதியில் சோழ மன்னன் கம்பு வர்மன் இறந்த இடத்தில் அவரது மகன் விஜய வர்மன் ஒரு சிவன் கோவிலை எழுப்பியுள்ளார். அதற்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோவிலும் அதற்கு அருகாமையிலேயே ஒரு காளி கோவிலும் இருந்துள்ளது.
அவை பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் நிலத்தில் புதைந்து மூடப்பட்டுள்ளது. அதன் அருகாமையிலேயே ராஜராஜேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.
பாழடைந்துள்ளது
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் தான் இதனை கட்டியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்கள், முதலாம் ராஜேந்திர சோழ தேவரின் கல்வெட்டுக்கள் இவையெல்லாம் மண்ணில் புதைந்து உள்ளது. இந்த கோவில்கள் அங்கு இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு பாழடைந்துள்ளது.
இதனை சிவனடியார்களாகிய நாம் முயற்சி செய்து தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று அடையாள சின்னங்களாக அறிவிக்க செய்ய வேண்டும், இதனை தற்போது ஆளுகின்ற அரசு கண்டுகொள்ளவில்லை என நான் கூறவில்லை. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்த, ஆண்டுகொண்டு இருக்கக்கூடிய எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.தாமோதரன் நன்றி கூறினார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக அரசு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறைகள் கட்டப்படாமல் உள்ளது.
ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது,
பல கோடி ரூபாய் நகைகள்
அறநிலையத்துறை சார்பில் கோவில் சொத்துக்கள் ஆன்லைனில் பதிவேற்றி பாதுகாக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளது. அதன் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும் கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில், மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே கொண்டு வந்து நிறுவ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.