வீட்டில் பிரிட்ஜ் வெடித்து பற்றி எரிந்த தீ :17 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் எரிந்து சாம்பலானது
திருவெண்ணெய்நல்லூர் அருகே பிரிட்ஜ் வெடித்து பற்றி எரிந்த தீயால், 17 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூத்தையன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர் நேற்று மாலை தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார்.
அப்போது, திடீரென வீட்டின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த பழனியம்மாள் அருகே சென்று பார்க்கையில், வீட்டுக்குள் தீவிபத்து நேர்ந்து இருந்தது. ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
பிரிட்ஜ் வெடித்தது
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அப்போது தான், வீட்டுக்குள் இருந்த பிரிட்ஜ் வெடித்து, வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து இருப்பது தெரியவந்தது. இதில் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின், பீரோ, அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியன முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.