கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கொலையான பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்டநாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). பா.ஜனதா நெல்லை மாநகர இளைஞரணி செயலாளரான இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அனீஸ் (28), பாஸ்கர் (21), விக்கி என்ற விக்னேஸ்வரன் (27), அஜித் (20), சந்துரு (23), வசந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகர் பிரபு உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே ஜெகன் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் பிரபு உள்ளிட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெகன் கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்காக, இன்ஸ்பெக்டர்கள் காசிபாண்டியன் (பாளையங்கோட்டை), வாசிவம் (மேலப்பாளையம்) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

ஜெகன் கொலை வழக்கில் தன்னையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்து கைது செய்து விடுவார்களா? என்ற பயத்தில், மூளிக்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் கட்டிட காண்டிராக்டர் ரஞ்சித் (29) நேற்று முன்தினம் மாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ரஞ்சித்தின் உடல் இறுதிச்சடங்குக்காக மூளிக்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மூளிக்குளத்தில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜெகனுக்கும், தி.மு.க. பிரமுகர் பிரபுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கடந்த ஓராண்டாகவே முன்விரோதம் இருந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள கோவில் விழாவில் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் தொடங்கி, பல்வேறு சம்பவங்களில் அவர்களுக்கு இடைேய மோதல் ஏற்பட்டது.

இதனை கண்காணித்த உளவுப்பிரிவு போலீசாரும், பிரபுவால் ஜெகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர் அதிகாரிகளுக்கு எச்சரித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரித்த போலீசார், அனுப்பி வைத்தனர். அப்போதே உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து இருந்தால், ஜெகன் கொலையை தடுத்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story