சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மர்ம சாவு
அரியலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி(வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நல்லதம்பி கீழமாத்தூரில் உள்ள தனது மாமனார் ராமசாமி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சடைக்கன்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள ஒரு வேப்பமரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் நல்லதம்பியின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டு இருக்கலாம் எனவும், மேலும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நல்லதம்பியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரியலூர்- பெரம்பலூர் சாலையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நல்லதம்பி வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தனது சொந்த ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.