சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்தது பயனற்றது


சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்தது பயனற்றது
x
தினத்தந்தி 19 Nov 2022 12:30 AM IST (Updated: 19 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலை சீரமைக்காமல் சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்தது பயனற்றது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழையால் மண்சரிவு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையடிவார கிராமங்களில் வன விலங்குகளால் விளை பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மலையடிவாரத்தில் ஒருங்கிணைந்த சோலார் வேலி அமைக்க வேண்டும். தரமான எலுமிச்சை, கருவேப்பிலை நாற்றுகள் வழங்க வேண்டும்.

வேளாண் பொறியியல் துறையில் கதிர் அறுக்கும் எந்திரம் போதிய அளவில் இல்லை. ஒன்றியத்துக்கு ஒரு எந்திரம் வீதம் வாங்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். தேவாரம் பகுதியில் மீண்டும் ஒற்றை காட்டுயானை விளை பயிர்களை சேதப்படுத்துகிறது. விவசாயிகளையும், விளை பயிர்களையும் யானையிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் திறப்பு

சண்முகாநதி அணையில் இருந்து நேற்று முன்தினம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன வாய்க்காலை தூர்வராமல் தண்ணீர் திறக்கப்பட்டதால் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் திறந்தும் பயனில்லை. தண்ணீர் திறக்கும் வரை வாய்க்காலை தூர்வாராமல் இருப்பது என்பது பொதுப்பணித்துறையின் அக்கறையற்ற செயல்பாடு ஆகும். வாய்க்காலை உடனடியாக சீரமைத்து விளைநிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதோடு, மின் இணைப்பு பெற்று ராட்சத கிணற்றில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கூடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கியது தொடர்பான புகார் மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியரை பணி இடைநீக்கம் செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூடடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மேகமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story