கொரோனாவுக்கு பிறகு மண்டபங்களின் வாடகையை உயர்த்த முடியவில்லை


கொரோனாவுக்கு பிறகு மண்டபங்களின் வாடகையை உயர்த்த முடியவில்லை
x

வீடு, கோவில்களில் திருமணம் நடைபெறுவதால் கொரோனாவுக்கு பிறகு மண்டபங்களின் வாடகையை உயர்த்த முடியவில்லை என உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கரூர்

வாடகையை உயர்த்தவில்லை

கரூரை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் பொன்னுச்சாமி:- திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அதிகளவில் மண்டபத்தில் தான் நடைபெறுகிறது. ஒவ்வொரு மண்டபத்திலும் மிகப்பெரிய ஹால், மணமேடை, டைனிங் ஹால், பார்க்கிங் வசதி, சமையலறை மற்றும் ஏ.சி. வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபத்தின் வாடகை என்பது மாதந்தோறுமோ அல்லது ஆண்டுதோறுமோ அதிகப்படுத்துவது இல்லை. 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் உயர்த்துகிறோம். அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் மண்டபங்களின் வாடகையை உயர்த்த முடியவில்லை. தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப ஜவுளி, மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் திருமண மண்டபத்தின் வாடகை என்பது நிரந்தர கட்டணமாகத்தான் உள்ளது. ஆனால் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் மண்டபத்தை தேடி வருவது குறைந்து வருகிறது. கோவில்களில் திருமணத்தை முடித்துவிட்டு அருகே உள்ள சிறு மண்டபங்கள் அல்லது ஓட்டல்களில் சாப்பாடு தயார் செய்து முடித்துக் கொள்கிறார்கள். இதனால் இன்றைய காலக்கட்டத்தில் மண்டபத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.

கோவில்களில் திருமணம்

குளித்தலை தனியார் திருமண மண்டப உரிமையாளர் என்ஜினீயர் சக்திவேல்:- ஒரு வீட்டில் திருமணம் என்றால் அனைத்து உறவுகளும் ஒன்று கூடி ஆளுக்கொரு வேலை என்று பிரித்து கொண்டு செய்வார்கள். ஆனால் எந்திரமயமாகி விட்ட இந்த உலகில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலும் திருமணங்கள் குறைந்த நபர்களைக்கொண்டு கோவில்களிலோ, வீடுகளிலோ எளிமையாக நடத்தப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நடுத்தர மக்கள் கோவில்களிலும் சார் பதிவு அலுவலகங்களிலும் திருமணங்களை நடத்தி முடித்துவிட்டு பத்திரிகையை எவ்வாறு வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் பகிர்கிறார்களோ அதுபோல திருமணம் நடந்த தகவலையும் அதன் மூலமே தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு. இதன் காரணமாகவே முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story