மழைக்காலங்களில் தீவு போல் மாறும் குடியிருப்பு
குனியமுத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். கார்டன் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், தீவு போல மாறிவிடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குனியமுத்தூர்
குனியமுத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். கார்டன் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், தீவு போல மாறிவிடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
எஸ்.என்.ஆர். கார்டன்
கோவை மாநகராட்சி 87-வது வார்டு குனியமுத்தூர் எஸ்.என்.ஆர். கார்டன் பகுதியில் ஏராளமானவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்ல குனியமுத்தூர்-பாலக்காடு சாலையில் இருந்து சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பை அண்டு பை ரோடு என்று அழைக்கப்படும் இந்த சாலை புனரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவமழை காரணமாக இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் சகதியான இந்த சாலையில் வழுக்கி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மீது வாகனங்கள் சேற்றை வாரி இறைக்கிறது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
குளம் போல் தேங்கி நிற்கும் மழை
இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த எஸ்.என்.ஆர். கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அருகில் உள்ள செங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த பகுதிக்குள் புகுந்து தேங்கி விடுவதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த மழைநீருடன் பாம்பு, விஷப்பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இதன்காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
மேலும் தொடர்ந்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழைநீர் வடியாமல் தேங்கி விடுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் பரவி வருகின்றன. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிஷோர், தவுபிக் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
வீட்டிற்குள் புகும் மழைநீர்
எஸ்.என்.ஆர். கார்டன் பகுதியில் மலைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்து மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்த பின்னர் தான் இங்கு வந்து மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ஒரு சில நேரங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.
மலைக்காலங்களில் இந்த பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் தீவு போல் காட்சியளிக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் சீருடை நனைவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களில் நடந்து செல்பவர்களின் மீது சேற்றை வாரி இறைத்தப்படி செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இந்த பகுதியை சீரமைத்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.