புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள தடுப்பு சுவர் அகற்றப்படும்
புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள தடுப்பு சுவர் அகற்றப்படும் என மேயர் தெரிவித்தார்.
வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், கவுன்சிலர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து புதிய மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கலெக்டர் மீன் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இந்த ஆய்வு கூறித்து மேயர் சுஜாதா கூறுகையில், அகழியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு சரி செய்யப்படும். மீன் மார்க்கெட் வியாபாரிகள் சாலையோரம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் காலை வேளைகளில் பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மீன் மார்க்கெட் முன்பு சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் முழுவதும் அகற்றப்படும். மீன் மார்க்கெட் வெளியே பேவர் பிளாக் கற்கள் பதிக்க மீன் வியாபாரி சங்கத்தினருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.