'ரோடு போட்டாச்சு...நிறுத்திய பஸ்சை விடுங்க..!'
ரோடு போட்டாச்சு...நிறுத்திய பஸ்சை விடுங்க..!’ என்று 2 கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தொண்டி,
நீலக்கடல் முத்தமிடும் கிராமம் முள்ளிமுனை. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலையில் கடற்கரையோரம் அமைந்து உள்ளது. இங்கு எந்நேரமும் ஓயாது கடல் அலைகள் கடற்கரை பரப்பை தொட்டு விளையாடி கொண்டு இருக்கும். இந்த கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் கடலில் கிடைக்கும் மீன்களை நாட்டுபடகில் சென்று பிடித்து அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று விற்று வந்தனர். இங்குள்ள மக்களில் பலர் வெளிநாடுகளில் வசித்து வந்தனர். ஆனால் பெண்கள் கடலில் கிடைக்கும் மீன்களை ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தனர்.
ஆனால் இந்த கிராமத்தில் இருந்து நேரடியாக ராமநாதபுரத்துக்கு பஸ் வசதி இல்லை. பக்கத்து கடற்கரை கிராமமான காரங்காடுக்கு திருவாடானையில் இருந்து வரும் டவுன் பஸ் தினசரி காலை 10 மணி, மாலை 3.30 மணி ஆகிய 2 வேளைகளில் இந்த முள்ளிமுனை கிராமத்துக்கு வந்து செல்கிறது. இது இப்பகுதி மக்களுக்கு பயன் உடையதாக இருக்கிறது.
இருப்பினும் இந்த பகுதி மக்கள் ராமநாதபுரம், மதுரைக்கு தங்கள் கிராமத்தில் இருந்து நேரடியாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து முள்ளிமுனை ஊராட்சி தலைவர், போக்குவரத்து துறை அமைச்சரிடம் தங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்ைக விடுத்தார். அதன் பயனாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மதுரையில் இருந்து முள்ளிமுனை வழியாக ராமநாதபுரத்துக்கு புதிய பஸ் வசதியை தொடங்கி வைத்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பஸ்சை முள்ளிமுனை, காரங்காடு ஆகிய 2 கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். தினமும் பஸ்சில் கூட்டம் அலைமோததான் செய்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் ெதாலைவில் இருக்கும் இந்த முள்ளிமுனை ஊருக்கு செல்லும் சாலை குண்டும்-குழியுமாக இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் மதுரை-ராமநாதபுரம் வரும் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.25 லட்சம் செலவில் சாலை போடப்பட்டு 3 மாதங்கள் ஆகி விட்டது. அமைச்சர் தொடங்கி வைத்த பஸ் இதுவரை வரவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரமான கிழக்கு கடற்கரை சாலையான ஏ.மணக்குடி பகுதிக்கு நடந்து செல்கின்றனர். அங்கும் சரிவர பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அருகில் உள்ள உப்பூர், தொண்டிக்கு சென்று ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரி உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பஸ் வசதி இல்லாமல் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது ராமநாதபுரத்துக்கு பஸ் வசதி இல்லாததால் கடலில் பிடிக்கப்படும் மீன்களை கூட விற்க முடியாமல் அப்பகுதி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ரோடு போட்டு பளபளவென இருக்கிறது. சாலை சரியில்லை என்று காரணம் கூறி நிறுத்திய பஸ்சை மீண்டும் எங்கள் ஊருக்கு இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.